search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டக்காரர்கள். போலீசார்"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. #Sterliteprotest #BanSterlite #policefiring
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து
    காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர். கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் போராட்டக்காரர்கள் சட்டவிரோத கும்பல் என அறிவிக்கப்பட்டனர்.

    மேலும், அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னரே, கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    தூத்துக்குடியில் அமைதி நிலவ சட்டம் - ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Sterliteprotest #BanSterlite #policefiring
    ×